திண்டுக்கல் - திருச்சி மேம்பாலம் அருகே என்ஜிஓ காலனி பகுதியில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது. நகரின் முக்கிய பகுதியில் 4 மாடி கட்டடங்களை கொண்ட இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக தினமும் வந்து சென்று மருத்துவம் பார்த்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றுகாலை முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 9 மணி போல மருத்துமனையின் ஐசியூ வார்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியிருக்கிறது. ஐசியூ அறையில் பல்வேறு இயந்திரங்கள், மின்சாதனங்கள் இருந்ததால் தீ விரைவாக பரவி மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கும் சடசடவென பரவியிருக்கிறது.
உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டன. மேலும் மருத்துவமனையில் தீப்பற்றிய பகுதியில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் தீயில் சிறுவன் உட்பட 6 பேர் சிக்கி உயிரிழந்தனர். மொத்தம் 28 உள்நோயாளிகள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உடனடியாக 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்ட கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த தீ விபத்தினால் நோயாளிகளின் உறவினர்களும் அக்கம் பக்கம் பகுதி மக்களும் திரண்டு வந்ததால் திண்டுக்கல் நகரே பரபரப்பாகியது. போலீஸார் அனைவரையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
from Vikatan Latest news